Saturday, May 31, 2014

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட காலியிடங்கள் 1,291-ஆக அதிகரிப்பு

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ். உள்ளிட்ட இந்திய குடிமைப் பணிகளுக்கான காலியிடங்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 1,291-ஆக அதிகரித்துள்ளது.
 இதற்கான அறிவிப்பாணையை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
 கடந்த ஆண்டு 1,080 காலிப்பணியிடங்களுக்காக தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 210 இடங்கள் அதிகரித்துள்ளன.
 கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவாக மிக அதிக எண்ணிக்கையிலான பணியிடங்களுக்கு இந்த ஆண்டு தேர்வுகள் நடைபெற உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளிட்ட காரணங்களால் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. அதேபோல், பல்வேறு சேவைகளில் புதிய பணியிடங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், ஓய்வு பெறுவோரின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளதால் காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும்: யு.பி.எஸ்.சி. தேர்வுக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஜூன் 30-ஆம் தேதி நள்ளிரவு வரை ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு www.upsconline.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கலாம். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்ளிட்ட 20 வகையான  பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு ஆகஸ்ட் 24-ஆம் தேதி நடைபெற உள்ளது.
 கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட 1,080 காலிப் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஏப்ரலில் நடத்தியது. இந்தத் தேர்வு முடிவுகள் அடுத்த வாரம் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment