Thursday, April 24, 2014

காலையில் கல்லூரி; மாலையில் பழக்கடை!


பழங்கள் விற்பனை செய்யும் கடையில் வேலை செய்துகொண்டே சென்னை பாரதி மகளிர் அரசு கல்லூரியில் எம்.எஸ்சி. படித்து வருகிறார் காயத்ரி.

காரைக்குடிதான் எங்களது சொந்த ஊர். இருபது ஆண்டுகளுக்கு முன்பு எங்களது குடும்பம் சென்னையிலுள்ள சாலிகிராமத்திற்கு குடிபெயர்ந்தது. என் அப்பா குமார். எட்டாவது வரைக்கும்தான் படிச்சிருக்கார். அவருக்கு தச்சு வேலை. அம்மா சாந்தியும் எட்டாவது வரைக்கும்தான் படிச்சிருக்காங்க. எனக்கு ஒரு தம்பி. அவன் இப்போ ஒன்பதாவது படிச்சிகிட்டிருக்கான்.

எனது பள்ளிப்படிப்பை விருகம்பாக்கத்திலுள்ள ஜெய்கோபால் கரோடியா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முடித்தேன். பத்தாம் வகுப்பில் 409 மதிப்பெண்கள் எடுத்து, பிளஸ் ஒன்னில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் சேர்ந்தேன். நன்றாகப் படித்துக் கொண்டிருந்த எனக்கு, பிளஸ் டூ படிக்கும் போது சிக்குன் குனியா காய்ச்சல் வந்ததால் இரண்டு மாதங்கள் பள்ளிக்கே போகமுடியவில்லை. அப்படி இருந்தும் கஷ்டப்பட்டு தேர்வை எழுதி, 708 மதிப்பெண்களுடன் பாஸாகிவிட்டேன்.

டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியில் பி.எஸ்சி. பயோ கெமிஸ்ட்ரி படிக்க இடம் கிடைத்தது. அது தனியார் கல்லூரி என்பதால் ஓர் ஆண்டிற்கு 20 ஆயிரம் ரூபாய் அளவிற்கு கட்டணம் செலுத்த வேண்டி இருந்தது. அப்போது என் அம்மா, மகளிர் சுய உதவிக் குழு மூலம் கடன் வாங்கி என்னைப் படிக்க வைத்தார். வாடகை வீட்டில் நாங்கள் வசித்து வருவதால், அப்பாவின் வருமானம் குடும்பத்துச் செலவுகளைச் சமாளிக்கவே பற்றாக்குறையாக இருந்தது.

இந்த நிலையில் படிப்புச் செலவும் இருந்தது. அப்போதுதான் நாமும் பகுதிநேர வேலைக்குப் போனால் என்ன என்று தோன்றியது. சாலிகிராமத்திலுள்ள பழக்கடை ஒன்றில் வேலை கேட்டேன். ‘இங்கே பகுதி நேரமாக யாரையும் வேலைக்கு சேர்த்துக்கொள்வதில்லை’ என்றனர்.

படித்துக்கொண்டே வேலை செய்தால், படிப்புச் செலவுகளை என்னால் பார்த்துக்கொள்ள முடியும் என்று, அவர்களிடம் வேண்டுகோள் வைத்தேன். ‘படிப்பதற்காக என்பதால், பகுதி நேர வேலைக்கு சேர்த்துக் கொள்கிறேன்’ என்று சேர்த்துக் கொண்டனர். தினமும் மாலை 6 மணி முதல் இரவு 9.30-லிருந்து 10 மணி வரை வேலை இருக்கும். அப்படி வேலை பார்த்தால் ஒரு நாளைக்கு 50 ரூபாய் கிடைக்கும். சனி, ஞாயிறு முழுநாள் வேலை செய்யவேண்டும். அப்படிச் செய்தால் ஒரு நாளைக்கு 150 ரூபாய் கிடைக்கும். இப்படி வேலை பார்த்துக் கொண்டே பி.எஸ்சி. படித்து முடித்தேன்.

பி.எஸ்சி. படித்து முடித்ததும் வேலைக்குத்தான் போக இருந்தேன். ஆனால் எனது ஆசிரியர்களின் தூண்டுதல்களால், பிராட்வேயிலுள்ள பாரதி மகளிர் கல்லூரியில் எம்.எஸ்சி வேதியியல் படித்துக் கொண்டிருக்கிறேன். காலையில் படிப்பது, கல்லூரிக்குச் செல்வது, மாலையில் பணி, இரவு நேரத்தில், அஸைன்மெண்ட் எழுதுவது என தினமும் பரபரப்பாக போகிறது எனது வாழ்க்கை. வேலை செய்துகொண்டே பி.எஸ்சி படித்து விட்டேன், ஆனால் எம்.எஸ்சி படிப்பது கடினமாக இருக்கிறது. நிறைய படிக்க வேண்டி இருக்கிறது. எழுத வேண்டி இருக்கிறது. இருந்தாலும் நான் செய்யும் வேலை எனது படிப்பு செலவுக்குப் பயன்படுகிறது என்பதால், அதை விடாமல் செய்து கொண்டிருக்கிறேன்.

நன்கு படித்து ஐ.ஏ.எஸ். ஆகவேண்டும், இல்லை யென்றால் நானும் ஒரு பேராசிரியராக வர வேண்டும் என்பதே எனது எதிர்கால லட்சியம்”  என்கிறார் தன்னம்பிக்கை மாணவி காயத்ரி.

No comments:

Post a Comment