Thursday, April 24, 2014

மின்னஞ்சல் +2 மாணவர்கள் கல்லூரிப் படிப்புகளை தேர்வு செய்வது எப்படி?

பிளஸ் டூ தேர்வு முடிவுகள் மே மாதம் 9-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. கல்லூரிகளையும் சரியான படிப்புகளைத் தேர்ந்தெடுப்பதிலும் மாணவர்களும் பெற்றோர்களும் சிந்தித்துச்  செயல்பட வேண்டிய நேரம் இது.

பிளஸ் டூ தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில்தான் படிப்புகளில் சேர முடியும் என்றாலும்கூட, மாணவர்களின் ஆர்வம், திறமை, குடும்பப் பொருளாதார நிலைமை போன்ற  பல்வேறு விஷயங்களைக் கருத்தில் கொண்டு கல்லூரிப் படிப்புகளில் சேருவதில் முடிவெடுக்க வேண்டியதிருக்கும். ஆதலால், முன்னதாகவே சேர விரும்பும் படிப்புகளையும் சேர விரும்பும் கல்லூரிகளையும் உத்தேசமாக முடிவு செய்து வைத்துக்கொள்வது நல்லது.

பெரும்பாலான மாணவர்கள் மருத்துவம், பொறியியல் போன்ற தொழில்நுட்பப் படிப்புகளில் சேருவதில் தீவிர ஆர்வம் காட்டுகிறார்கள். வேறு பலர் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர நினைப்பார்கள். எந்தக் கல்லூரிகளில் சேர நினைக்கிறோம் என்பதை முதலில் முடிவு செய்ய வேண்டும்.

கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் போன்ற பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்த மாணவர்கள் தங்களின் சாய்ஸ் மருத்துவமா, பொறியியலா என்பதை மதிப்பெண்களைப் பார்த்து முதலிலேயே தீர்மானித்து விடுவது நல்லது. மருத்துவப் படிப்பைத் தேர்வு செய்து விட்டு, பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கவுன்சலிங்கிற்கு வந்தாலும்கூட, அந்தக் கட்டத்தில் ஏதாவது ஒன்றுதான் என்பதை முடிவு செய்துவிட வேண்டியதிருக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளில் சேர்ந்து படிக்க வேண்டும் என்று நினைத்தால், நிச்சயம் இடம் கிடைக்கும். அந்த அளவுக்கு ஏராளமான இடங்கள் உள்ளன. நல்ல தரம் வாய்ந்த பொறியியல் கல்லூரிகளில் நாம் நினைக்கும் படிப்புகளில் சேர வேண்டும் என்றால், நல்ல மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். கல்லூரிகளில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கின்றன? அங்கு படிக்கும் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் எப்படி இருக்கிறது? தரம் வாய்ந்த ஆசிரியர்கள் இருக்கிறார்களா? கல்லூரிகளில் வேலைவாய்ப்புக்கு உதவும் ஆளுமைப் பயிற்சி அளிக்கப்படுகிறதா? கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலைவாய்ப்புக் கிடைக்கிறதா என்பதையெல்லாம் பார்த்து கல்லூரியைத் தேர்வு செய்ய வேண்டும்.

புதிய கல்லூரிகளைவிட, ஏற்கெனவே பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் கல்லூரிகளில் குறிப்பாக, முதுநிலைப் பட்ட வகுப்புகள் உள்ள கல்லூரிகளில் குறைந்தபட்ச  வசதிகள் செய்யப்பட்டிருக்கும் என நம்பலாம். எனினும், நாம் சேர விரும்பும் கல்லூரிகளை நேரில் சென்று பார்த்து வருவது நல்லது.  அங்கு படித்து வரும் மாணவர்களிடம் கல்லூரி பற்றி விசாரித்துத் தெரிந்துகொள்ள வேண்டும்.

பொறியியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் அரசு ஒதுக்கீட்டின்கீழ் சேர விரும்பும் கல்லூரிகளில் முந்தைய ஆண்டின் கட் ஆஃப் மார்க் எவ்வளவு என்பதைத் தெரிந்துகொண்டு அதற்கேற்ப கல்லூரிகளையும் பாடப்பிரிவுகளையும் முடிவு செய்துகொள்ளலாம். நாம் விரும்பும் நல்ல கல்லூரியில் குறிப்பிட்ட பாடத்தில் இடம் கிடைக்காமல் இருந்தாலும், அதே கல்லூரியில் வேறு பாடப்பிரிவுகளில் காலி இடங்கள் இருந்தால் அதை எடுத்துக் கொள்ளப் போகிறோமா அல்லது வேறு கல்லூரியில் அதே பாடப் பிரிவைத் தேர்வு செய்துகொள்ளப் போகிறோமா என்பதையும் தீர்மானித்துக்கொள்ள வேண்டும். அதற்கேற்ப கல்லூரி மற்றும் பாடப்பிரிவு வரிசைப் பட்டியலை தயார் செய்து வைத்துக் கொள்வதன் மூலம் கடைசி நேர பரபரப்பைத் தவிர்க்க முடியும். நிர்வாக ஒதுக்கீட்டின்கீழ் சேர விரும்பும் மாணவர்கள், அதற்கான நிதி ஆதாரங்கள் குறித்து பெற்றோர்களுடன் கலந்து பேசி முடிவு செய்து கொள்ள வேண்டும்.

பிளஸ் டூ தேர்வில் மிக அதிக மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்களுக்குத்தான் எம்பிபிஎஸ் படிப்பில் சேர இடம் கிடைக்கும். கடந்த ஆண்டில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர எவ்வளவு கட் ஆஃப் மதிப்பெண்கள் இருக்கிறது என்பதைப் பார்த்து உத்தேசமாக நமக்கு எம்பிபிஎஸ் படிப்பில் இடம் கிடைக்குமா? என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். எம்பிபிஎஸ் படிப்பில் சேர முடியவில்லை என்றால், பிடிஎஸ் படிப்பில் சேர்ந்து படிக்கப் போகிறோமா அல்லது வேறு படிப்பில் சேரப் போகிறோமா என்பதையும் யோசித்து வைத்துக்கொள்ள வேண்டும். அரசு ஒதுக்கீட்டின் கீழ் எம்பிபிஎஸ் படிப்பில் இடம் பெற இயலாவிட்டால், சுயநிதிக் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க வேண்டும் என்றால், அதற்கேற்ற பொருளாதார வசதி இருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும். மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு அந்தப் படிப்பில் சேர இடம் கிடைக்காவிட்டால், அடுத்த சாய்ஸ் என்ன என்பதை முன்னதாக தீர்மானித்து அதற்காக விண்ணப்பித்துவிட வேண்டியது அவசியம்.

குறைந்த செலவில் வெளிநாடுகளில் போய் எம்பிபிஎஸ் படிக்க விரும்பும் மாணவர்கள், வெளிநாட்டு எம்பிபிஎஸ் படிப்பு குறித்து முழுமையாகத் தெரிந்திருப்பது இல்லை. அங்கு படித்து முடித்துவிட்டு இங்கே இந்திய மருத்துவக் கவுன்சில் நடத்தும் தகுதித் தேர்வை எழுதித் தேர்ச்சி பெற வேண்டும். அதன் பிறகு, இங்குள்ள மருத்துவமனையில் இன்டர்ன்ஷிப் பெற வேண்டியதிருக்கும். இதற்கு ஆகும் காலக் கணக்கையும் மாணவர்கள் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

விரும்பும் கல்லூரியில் விரும்பும் பாடப்பிரிவுகளில் இடம் இல்லாமல் இருக்கலாம். விருப்பமில்லாத கல்லூரிகளில் விரும்பும் பாடப்பிரிவுகளில் இடம் இருக்கலாம். நாம் நினைக்கும் கல்லூரியோ, பாடப்பிரிவோ கிடைக்காவிட்டால், நமது அடுத்த சாய்ஸ் என்ன என்பதை வரிசைப்படுத்திக்கொள்ள வேண்டும். மாணவர்களின் ஆர்வம், திறமை, தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், குடும்பச் சூழ்நிலை போன்றவற்றைக் கருத்தில் கொண்டு எதிர்காலப் படிப்பைத் திட்டமிட வேண்டும்.

பல நேரங்களில் மாணவர்களின் விருப்பமும் பெற்றோர்களின் விருப்பமும் ஒன்றாக இருப்பதில்லை. மாணவர்களின் விருப்பத்திற்கு மாறாக பெற்றோர்கள் தங்களது விருப்பங்களை குழந்தைகளிடம் திணிக்கக்கூடாது. மாணவர்களின் விருப்பத்திற்கு மாறான படிப்புகளில் சேர்த்தால், அந்தப் படிப்பில் மாணவர்களுக்கு ஆர்வம் இருக்காது. அந்த, அதிருப்தி, பாடங்களில் பிரதிபலிக்கக்கூடும்.

மாணவர்கள் ஆர்வத்துடன் சேர விரும்பும் படிப்பு, அந்த மாணவருக்கு ஏற்றதாக இருக்காது என கருதும் பட்சத்தில் அதற்கான காரணங்களை விளக்கிக் கூறி, அவர்களை சமாதானப்படுத்த வேண்டும். படிப்பு என்பது விருப்பம் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, துறைசார் அறிவும் திறமையும் சம்பந்தப்பட்டது என்பதையும் அவர்களுக்குப் புரியவைக்க வேண்டும்.

சில மாணவர்களுக்கு எந்த ஒரு பாடத்திலும் பெரிய ஈடுபாடு இருக்காது. அதுபோன்ற சூழ்நிலையில் மாணவர்களின் திறமையைக் கருத்தில்கொண்டு அவர்களுக்கு ஏற்ற படிப்பைத் தேர்வு செய்ய வேண்டும். இதற்காக ஆசிரியர்கள் உள்ளிட்ட மற்றவர்களின்  ஆலோசனைகளைப் பெறுவது நல்லது. தங்களது உறவினர்களின் குழந்தைகள் படிக்கிறார்கள் என்றோ, பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் படிக்கிறார்கள் என்றோ ஒரு பாடப்பிரிவில் சேர்க்க முயல வேண்டாம். அவர்களது குழந்தையின் சூழ்நிலைக்கு ஏற்ப, படிப்பைத் தேர்வு செய்திருப்பார்கள். நாம் நமது குழந்தைகளின் திறமைக்கேற்ற படிப்பைத் தேர்வு செய்தால் அந்த மாணவரின் எதிர்காலம் நன்றாக இருக்கும்.

கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு ஒற்றைச்சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதில்லை என்பதால், மாணவர்கள் தாங்கள் பெற்றுள்ள மதிப்பெண்களுக்கு ஏற்ப, விரும்பும் சில கல்லூரிகளைத் தேர்வு செய்து, தாங்கள் விரும்பும் பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட படிப்புகளில் எந்த வகையான துணைப் பாடங்கள் இருக்கிறது என்பதையும் கருத்தில் கொண்டு விண்ணப்பிக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட கல்லூரியில் ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும் தனித்தனி விண்ணப்பங்கள் போட வேண்டியதிருக்கும். அதேபோல, ரெகுலர் வகுப்புகளுக்கும் சுயநிதி வகுப்புகளுக்கும் தனித்தனியே உரிய காலத்துக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

ஒன்றுக்கு மேற்பட்ட கல்லூரிகளில் அட்மிஷன் கிடைத்தால், எந்தக் கல்லூரியில் எந்தப் படிப்பில் சேருவது என்பதை உடனடியாகத் தீர்மானித்து குறிப்பிட்ட காலத்துக்குள் கட்டணத்தைச் செலுத்தி விட வேண்டும். இல்லாவிட்டால், கிடைத்த அட்மிஷன் ரத்தாகி விடும் சாத்தியம் உள்ளது. கல்லூரி அட்மிஷன் பட்டியல் காத்திருப்போர் பட்டியலில் இருந்தால், அதற்காக எவ்வளவு காலம் காத்திருப்பது அல்லது அட்மிஷன் கிடைத்த இடத்தில் சேர்ந்து விடலாமா என்பது குறித்து நிலைமைக்குத் தகுந்தபடி முடிவு எடுத்துச் செயல்பட வேண்டும்.

வேளாண்மை, கால்நடை மருத்துவம், சட்டம் போன்ற படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களும் அதற்குத் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும். தமிழகத்தைப் பொருத்தவரை கல்லூரிகளில் சேர நுழைவுத் தேர்வு இல்லை. என்றாலும், பல்வேறு தொழிற்படிப்புகளில் சேருவதற்கு அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. அதாவது ஹோட்டல் மேனேஜ்மெண்ட், ஃபேஷன் டிசைன், ஃபேஷன் டெக்னாலஜி போன்ற படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு எழுத வேண்டியதிருக்கும். இதேபோல, பிளஸ் டூ படித்து முடித்த மாணவர்களுக்காக பல்வேறு முக்கியக் கல்வி நிலையங்களில் ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த அறிவியல் படிப்புகள் உள்ளன. அதில் சேரவும் நுழைவுத் தேர்வு எழுத வேண்டியதிருக்கும். நேஷனல் லா ஸ்கூல் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களிலும் நுழைவுத் தேர்வு மூலம் சேர்க்கப்படுகிறார்கள். இதேபோல, பிஆர்க் படிக்க விரும்பும் மாணவர்களும் அதற்கான நேட்டா நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். நுழைவுத் தேர்வு எழுதியவர்கள், சில நேரங்களில் சம்பந்தப்பட்ட கல்வி நிலையத்திற்குத் தனியே விண்ணப்பிக்க வேண்டியதிருக்கலாம்.

சிஏ, ஏசிஎஸ், காஸ்ட் அக்கவுண்டிங் போன்ற படிப்புகளில் சேர விரும்பும் பிளஸ் டூ படித்த மாணவர்கள் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களை அணுகி, தனியே விண்ணப்பிக்க வேண்டும். அதுகுறித்த விவரங்களை இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். நேரில் சென்றும் விவரங்களை அறியலாம்.

கல்லூரியில் படித்துக்கொண்டே சி.ஏ. படிக்கமுடியாது. தொலைநிலைக் கல்வி மூலம் படித்துக் கொண்டு சிஏ படிக்க அனுமதிக்கப் படுகிறது. கல்லூரியில் ஏதாவது பட்டப் படிப்பைப் படித்துக்கொண்டே காஸ்ட் அக்கவுண்டிங் மற்றும் கம்பெனி செக்ரட்டரிஷிப் படிப்புகளைப் படிக்க முடியும்.

உயர்கல்வி படிப்பதற்கான துறைகள் ஏராளம். பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளிவருவதற்கு முன்னதாகவே, எதிர்காலப் படிப்பு குறித்து பிளஸ் டூ மாணவர்கள் திட்டமிட்டு, அதற்கான செயலில் களம் இறங்க வேண்டும். மருத்துவமும், பொறியியலும்தான் உயர்ந்த படிப்பு என நினைக்காதீர்கள். படிப்புகளில் உயர்ந்தது, தாழ்ந்தது என்று எதுவும் கிடையாது. எந்தப் படிப்பைப் படித்தாலும் சிறப்பாகப் படிக்கின்ற மாணவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. பல்வேறு துறைகளில் சிறப்பாகப் படித்த மாணவர்கள் நல்ல ஊதியத்தில், நல்ல வேலையை எட்டிப் பிடித்திருக்கிறார்கள். எனவே, மாணவர்களுக்கு எந்தத் துறையில் ஆர்வம் இருக்கிறதோ, அந்தத் துறையில் நல்ல கல்வி நிறுவனங்களில் சேர்த்து விடுங்கள். எந்தப் படிப்பைப் படித்தாலும் திறமையான எதிர்காலம் காத்திருக்கிறது. விடாமுயற்சியும் கடின உழைப்பும்தான் வெற்றிக்கு வழிகாட்டி.

இலவச கம்ப்யூட்டர் பயிற்சி

பாரதீய வித்யா பவன் சார்பில் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. 18 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் இதில் பங்கு பெறலாம். இந்த நிறுவனத்தின் காந்தி இன்ஸ்டிட்யூட் ஆஃப் கம்ப்யூட்டர் எஜுகேஷன் அண்ட் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி மையங்கள் அமைந்துள்ள மயிலாப்பூர், தி.நகர் மையங்களில் இந்தப் பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.

படித்த, வேலையில்லாத, பொருளாதார ரீதியில் பின் தங்கிய நிலையில் உள்ள இளைஞர்களுக்காக இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. மூத்த குடிமக்களும் இப்பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம். மயிலாப்பூரில் கிழக்கு மாட வீதியிலும், தி.நகரில் தணிகாசலம் வீதியிலும் இந்த மையங்கள் அமைந்துள்ளன. வாரத்துக்கு மூன்று நாட்கள் வீதம் மூன்று மாதங்களுக்கு இப்பயிற்சி அளிக்கப்படும். விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.04.2014.  

விவரங்களுக்கு: 044-24643450, 044-24643420

No comments:

Post a Comment